கோப்பை வென்றது இந்தியா: கோஹ்லி, சுப்மன் கில் சதம் | ஜனவரி 15, 2023

தினமலர்  தினமலர்
கோப்பை வென்றது இந்தியா: கோஹ்லி, சுப்மன் கில் சதம் | ஜனவரி 15, 2023

திருவனந்தபுரம்:  மூன்றாவது ஒருநாள் போட்டியில் அசத்திய இந்திய அணி, 317 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. தொடரை 3–0 என முழுமையாக வென்று கோப்பை கைப்பற்றியது. கோஹ்லி(166), சுப்மன் கில்(116) சதம் விளாசினர். இலங்கை அணி மீண்டும் ஏமாற்றம் அளித்தது.

இந்தியா வந்த இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதல் இரு சவாலில் வென்ற இந்திய அணி, தொடரை 2–0 என கைப்பற்றியது. மூன்றாவது போட்டி கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்பீல்டு சர்வதேச மைதானத்தில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா, ‘பேட்டிங்’ தேர்வு செய்தார். ஹர்திக் பாண்ட்யா, உம்ரான் மாலிக்கிற்கு ‘ரெஸ்ட்’ கொடுக்கப்பட, சூர்யகுமார், வாஷிங்டன் சுந்தர் வாய்ப்பு பெற்றனர். 

 

கலக்கல் துவக்கம்: இந்திய அணிக்கு ரோகித் சர்மா, சுப்மன் கில் அதிரடி துவக்கம் தந்தனர். லகிரு குமாரா வீசிய 6வது ஓவரில் ரோகித் ஒரு சிக்சர், சுப்மன் 4 பவுண்டரி அடிக்க, 23 ரன்கள் எடுக்கப்பட்டன. ரஜிதா வீசிய 10வது ஓவரில் ரோகித் வரிசையாக 2 சிக்சர், ஒரு பவுண்டரி அடிக்க, 16 ரன்கள் கிடைத்தன. முதல் 15 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 91 ரன்கள் எடுக்கப்பட்டன. ரோகித், 42 ரன்களுக்கு வெளியேறினார். 

 

இரண்டாவது சதம்: பின் கோஹ்லி–சுப்மன் கில் சேர்ந்து மிரட்டினர். இருவரும் பவுண்டரி, சிக்சர்களாக விளாச, ஸ்கோர் ‘ஜெட்’ வேகத்தில் உயர்ந்தது. ரசிகர்களுக்கு கரும்பாக இனித்த சுப்மன், ஒருநாள் அரங்கில் இரண்டாவது சதம் எட்டினார். தொடர்ந்து அசத்திய இவர், வாண்டர்சே வீசிய 32வது ஓவரில் 4 பவுண்டரி விளாச, 18 ரன்கள் கிடைத்தன. இரண்டாவது விக்கெட்டுக்கு 131 ரன் சேர்த்த நிலையில், ரஜிதா பந்தில் சுப்மன்(116) போல்டானார். அடுத்து வந்த ஸ்ரேயாஸ் ‘கம்பெனி’ கொடுக்க, சீறி வரும் ‘காளையாக’ ரன் வேட்டையை கோஹ்லி தொடர்ந்தார். ரஜிதா பந்தை தோனி போல ‘ஹெலிகாப்டர் ஷாட்’ அடித்து சிக்சருக்கு பறக்க விட்டார். பின் கருணாரத்னே வீசிய 45வது ஓவரில் இவர் வரிசையாக 2 சிக்சர், ஒரு பவுண்டரி அடிக்க, 19 ரன்கள் கிடைத்தன. ஸ்ரேயாஸ், 38 ரன்களுக்கு அவுட்டானார். ராகுல்(7), சூர்யகுமார்(4) நிலைக்கவில்லை. கடைசி கட்டத்தில் சிக்சர்களாக விளாசிய கோஹ்லி, 150 ரன்களை கடந்தார். இந்திய அணி 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 390 ரன்கள் குவித்தது. கோஹ்லி 166 ரன்(110 பந்து, 13 பவுண்டரி, 8 சிக்சர்), அக்சர் படேல்(2) அவுட்டாகாமல் இருந்தனர். 

 

சிராஜ் மிரட்டல்: கடின இலக்கை விரட்டிய இலங்கை அணி, முகமது சிராஜ் பந்துவீச்சில் சிதறியது. பெர்னாண்டோ(19) தவிர மற்ற ‘டாப்–ஆர்டர்’ பேட்டர்கள் ஒற்றை இலக்கில் திரும்பினர். 22 ஓவரில் 73 ரன்களுக்கு சுருண்டு தோல்வி அடைந்தது.

இந்திய சார்பில் சிராஜ் அதிபட்சமாக 4 விக்கெட் வீழ்த்தினார்.  

 

ஆர்வம் குறைவு

ஒருநாள் போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் குறைந்து வருகிறது. நேற்றைய போட்டி நடந்த திருவனந்தபுரம் கிரீன்பீல்டு சர்வதேச மைதானத்தில் 38,000 பேர் அமர்ந்து ரசிக்கலாம். ஆனால் 17,000 பேர் தான் வந்திருந்தனர். இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் கூறுகையில்,‘‘பாதி அரங்கம் காலியாக இருந்தது. ஒருநாள் போட்டியின் சகாப்தம் முடிவுக்கு வருகிறதா,’’என கேள்வி எழுப்பினார்.

 

வீரர்கள் காயம்

நேற்று கருணாரத்னே வீசிய பந்தை(42.5), கோஹ்லி பவுண்டரிக்கு விரட்டினார். இதனை எல்லையில் தடுக்க முயன்ற இலங்கை வீரர்கள் பண்டாரா, வாண்டர்சே பலமாக மோதிக் கொண்டனர். பண்டாராவுக்கு இடது முழங்காலில் காயம் ஏற்பட்டது. வாண்டர்சேக்கு பாதத்தில் வலி அதிகமாக இருந்தது. இவர்கள் ‘ஸ்டிரெச்சர்’ மூலம் ‘ஸ்கேன்’ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். வாண்டர்சேக்கு பதில் மாற்று வீரராக வெலாலகே வந்தார். பேட்டிங் செய்ய பண்டாரா களமிறங்கவில்லை.

 

இந்தியாவின் கோஹ்லி, தனது 63வது ரன்னை எட்டிய போது ஒருநாள் போட்டி வரலாற்றில் அதிக ரன் குவித்த வீரர்கள் வரிசையில் இலங்கையின் மகிளா ஜெயவர்தனாவை (12650 ரன்) முந்தி 5வது இடம் பிடித்தார். கோஹ்லி, இதுவரை 268 போட்டியில், 46 சதம் உட்பட 12754 ரன் எடுத்துள்ளார். முதலிடத்தில் இந்திய ஜாம்பவான் சச்சின் (18426 ரன்) உள்ளார்.

46 சதம்

அபாரமாக ஆடிய கோஹ்லி, ஒருநாள் போட்டி அரங்கில் அதிக சதம் விளாசிய வீரர்கள் வரிசையில் 2வது இடத்தில் நீடிக்கிறார். கோஹ்லி, இதுவரை 268 போட்டியில், 46 சதம் அடித்துள்ளார். முதலிடத்தில் இந்திய ஜாம்பவான் சச்சின் (49 சதம், 463 போட்டி) உள்ளார். கோஹ்லி இன்னும் 3 சதம் அடிக்கும் பட்சத்தில் இப்பட்டியலில் முதலிடத்தை சச்சினுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

 

கோஹ்லிக்கு, ஜனவரி 15 மிகவும் ராசியான தினம். இந்நாளில், சர்வதேச கிரிக்கெட்டில் நான்கு முறை சதம் அடித்துள்ளார். 2017ல் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 122 ரன் விளாசிய இவர், 2018ல் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் 153 ரன் குவித்தார். பின், 2019ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 104 ரன் எடுத்த இவர், ஜன. 15ம் தேதியான நேற்றும் சதம் (166*) கடந்தார்.

 

2503 ரன்

இலங்கைக்கு எதிராக ஒருநாள் போட்டியில் அதிக ரன் குவித்த இந்திய வீரர்கள் வரிசையில் தோனியை (2383 ரன்) முந்தி 2வது இடம் பிடித்தார் கோஹ்லி. இவர், இதுவரை 50 போட்டியில், 10 சதம், 11 அரைசதம் உட்பட 2503 ரன் எடுத்துள்ளார். முதலிடத்தில் ஜாம்பவான் சச்சின் (3113) உள்ளார்.

 

10வது சதம்

இலங்கைக்கு எதிராக தனது 10வது சதம் விளாசினார் கோஹ்லி. இதன்மூலம் ஒருநாள் போட்டி அரங்கில், எந்த ஒரு அணிக்கு எதிராக அதிக சதம் அடித்த வீரரானார். இதற்கு முன், கோஹ்லி (எதிர்: வெஸ்ட் இண்டீஸ், இலங்கை), சச்சின் (எதிர்: ஆஸ்திரேலியா) தலா 9 சதம் அடித்திருந்தனர்.

317 ரன் வித்தியாசம்

இலங்கையை 317 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்திய அணி, ஒருநாள் போட்டி வரலாற்றில் அதிக ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணிகளுக்கான பட்டியலில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தது. இதற்கு முன் 2008 ல் நியூசிலாந்து அணி 290 ரன் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தியது சிறந்த வெற்றியாக இருந்தது.

 

283 ரன்

ஒருநாள் தொடரில் அதிக ரன் குவித்த வீரர்களுக்கான வரிசையில் இந்தியாவின் கோஹ்லி முதலிடம் பிடித்தார். இவர், 3 போட்டியில், 2 சதம் உட்பட 283 ரன் விளாசினார். அடுத்த இரு இடங்களை முறையே இந்தியாவின் சுப்மன் கில் (207 ரன்), ரோகித் சர்மா (142) கைப்பற்றினர். இலங்கை சார்பில் கேப்டன் ஷானகா, அதிகபட்சமாக 121 ரன் எடுத்தார்.

 

9 விக்கெட்

அதிக விக்கெட் கைப்பற்றிய பவுலர்களுக்கான பட்டியலில் இந்தியாவின் முகமது சிராஜ் முதலிடம் பிடித்தார். இவர், 3 போட்டியில், 9 விக்கெட் வீழ்த்தினார். அடுத்த மூன்று இடங்களை முறையே இலங்கையின் ரஜிதா (6 விக்கெட்), இந்தியாவின் உம்ரான் மாலிக் (5), குல்தீப் யாதவ் (5) கைப்பற்றினர்.

 

73 ரன்

மூன்றாவது போட்டியில் 73 ரன்னுக்கு சுருண்ட இலங்கை அணி, ஒருநாள் போட்டி அரங்கில் இந்தியாவுக்கு எதிராக தனது மோசமான ஸ்கோரை பதிவு செய்தது. இதற்கு முன், இரண்டு முறை (1984, 2013) தலா 96 ரன்னுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது.

* தவிர இது, ஒருநாள் போட்டியில் இலங்கை அணியின் 4வது மோசமான ஸ்கோரானது. ஏற்கனவே தென் ஆப்ரிக்கா (43 ரன், 2012), வெஸ்ட் இண்டீஸ் (55 ரன், 1986), இங்கிலாந்து (67 ரன், 2014) அணிகளுக்கு எதிராக மோசான ஸ்கோரை பெற்றுள்ளது.

 

அடுத்து நியூசி.,

இலங்கை தொடர் முடிந்த நிலையில் இந்திய அணி, அடுத்து சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக 3 ஒருநாள், 3 ‘டி–20’ போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் ஒருநாள் போட்டி வரும் ஜன. 18ல் ஐதராபாத்தில் நடக்கிறது. மீதமுள்ள போட்டிகள் ராய்ப்பூர் (ஜன. 21), இந்துாரில் (ஜன. 24) நடக்கின்றன. மூன்று ‘டி–20’ போட்டிகள் முறையே ராஞ்சி (ஜன. 27), லக்னோ (ஜன. 29), ஆமதாபாத்தில் (பிப். 1) நடக்கவுள்ளன.

மூலக்கதை